திருச்சி திமுகவில் கட்சியின் அடிமட்டத் தொண்டராக லால்குடியில் ‘புல்லட் நேரு’வாக அரசியல் வாழ்வை தொடங்கிய அதிரடி ஆக்க்ஷன் ஹீரோ நேரு இன்று ஒட்டுமொத்த திருச்சியை மட்டுமல்ல, மத்திய மண்டலத்தையே ஆளும் பேரரசனாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். ஒவ்வொரு காலகட்டத்திலும் திமுக மறுசீரமைக்கப்பட்டு, அடுத்த தலைமுறைக்கான பயணத்தை தொடங்கும் போது வலிமையான செயல்வீரர்களை களத்தில் அடையாளப்படுத்தும்; முந்தைய தலைமுறை வீரியமிக்க தலைவர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு அவர்களின் செயல்பாடுகள் இருக்குமாறு வலியுறுத்தப்படும். அதற்கான அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் திமுக வழங்கும். அதில் சிலர் முந்தைய தலைமுறைக்கு ஈடு கொடுக்கமுடியாமல் வீழ்வதும் உண்டு, அவர்களுக்கு சரிசமமாக செயல்படுவதும் உண்டு. ஆனால் ஒருசிலரே குருவை மிஞ்சும் சிஷ்யர்களாக, “16 அடி பாயும்” அடுத்த தலைமுறையாக சரித்திரம் படைப்பார்கள். அப்படி ஒரு சரித்திரம் படைத்தவர் தான் லால்குடி நேரு என்கிற கே. என். நேரு. 1976-க்கு பிறகு திமுக ஆட்சியை இழந்திருந்த காலங்களில் குறிப்பாக 80களில் இட ஒதுக்கீடு போராட்டம்,1984ல் ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்கள் 1985ல் மாநாடு, 1989ல் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் ஆர்ப்பாட்டங்களில் மட்டுமே கலந்து கொள்ள தீரமிக்க, வீரமிக்க இளைஞர் படை தேவைப்பட்டது. அந்த இடைவெளியில் தொடர்ந்து 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நேரங்களில் ஒரு தலைமுறை மாற்றத்தை சந்திக்க நேரிடும். அதிலும் குறிப்பாக ஆட்சிக்கு வர போராடும் பிரதான எதிர்க்கட்சிக்கு அந்தப் பிரச்சனைகள் நிறைய உண்டு. அப்படியிருந்த காலகட்டத்தில் திமுகவின் மிக முக்கியமான கோட்டையாக கருதப்பட்ட திருச்சியில் தீரமிக்க இளைஞராக கட்சியால் கண்டெடுக்கப்பட்டவர் தான் இந்த தீரர் கே. என். நேரு.

திமுகவின் அரசியல் வரலாற்றில் திருச்சி எப்போதும் திருப்புமுனை திருச்சி, தீரர்கள் நிறைந்த திருச்சி என்று பெருமிதத்துடன் குறிப்பிடப்படும். அப்படிப்பட்ட திருச்சியை கட்டி ஆள்வதற்கு, அதிலும் பேரறிஞர் அண்ணா காலத்து அரசியல்வாதியும் திமுகவின் முதல் அதிரடி தளபதியாகவும் பெயரெடுத்தவர் அன்பில் தர்மலிங்கம். கட்சி ஆரம்பித்து 80 ஆண்டுகள் கடந்த பிறகும் இன்றும் பேசப்படும் அதிரடி அரசியல்வாதியாக அடையாளம் காட்டப்படுபவர் அன்பில் தர்மலிங்கம். மறைந்த திமுக தலைவர் கலைஞரை விட வயதில் மூத்தவர்; திமுகவின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர் என்கிற பெருமை அவருக்கு உண்டு. அதையெல்லாம் விட, அதிரடி அரசியல்வாதி என்றும், ஆர்ப்பாட்டமான அரசியல்வாதி என்றும், கட்சித் தொண்டர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் களத்தில் முதல் ஆளாக நிற்கும் களப்பணியாளர் என்றும் பேரறிஞர் அண்ணாவாலும் கலைஞராலும் பாராட்டப்பட்டவர்.அவரது குடும்பமே கலைஞர் குடும்பங்களில் ஒன்று என்று இரண்டற கலந்துவிட்ட குடும்பம் இப்படி ஒரு பேராளுமையை ஈடு செய்ய முடியுமா என்பது மிகப்பெரிய — இன்னும் சொல்லப்போனால் ‘மில்லியன் டாலர்’ கேள்வியாக இருந்தது. ஆனால் “குருவை மிஞ்சிய சிஷ்யன் போல விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்பது போல் அன்றைய திமுக தலைவர் கலைஞரால் அடையாளப்படுத்தப்பட்ட தீரமிகு தளபதியாக திருச்சியை தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தவர் தான் நேரு. 1989 ஆம் ஆண்டு கலைஞர் அமைச்சரவையில் இளம் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் சற்றேறக்குறைய 36 ஆண்டுகளாக திருச்சியின் அடையாளமாக கே. என். நேரு திகழ்கிறார் என்பது யாராலும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.

1991 முதல் 1996 வரை ஜனநாயக விரோத ஆட்சியாக ஜெயலலிதா நடத்தியதை தமிழகம் நன்றாக அறியும். அப்படிப்பட்ட சூழல்களிலும் அனைத்தையும் எதிர்கொண்டு திருச்சியின் அடையாளமாக இவரே தான் இருந்தார். மிகப்பெரிய ஆளுமையாக சித்தரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஆட்சி காலங்களில் கூட “வந்தார்கள், சென்றார்கள்” என்கிற வாக்கியத்தைப் போலத்தான் திருச்சிக்கான அதிமுக தலைவர்கள் அமைந்தனர். திமுகவிலும் கூட முசிறி செல்வராஜ் போன்ற திறமையாளர்கள் இருந்தாலும், கே. என். நேரு திருச்சியின் அடையாளம் என்கிற நிலையை அடையவே முடியவில்லை என்பதுதான் எதார்த்தம். இத்தனைக்கும் அன்பில் தர்மலிங்கம் உயிரோடு இருந்தபோதே கே. என். நேரு அமைச்சராக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டத்திலும் அரசியல் எதிரிகளை எதிர்கொண்டவர்; சொந்தக் கட்சியிலும் எந்த பின்னணியும் இல்லாமல் வளர்ந்தவர்; ஜெயலலிதாவால் பலமுறை குறிவைக்கப்பட்ட திமுகவின் தளபதியாக இருந்தும் “திருச்சி என்றால் நேரு — நேரு என்றால் திருச்சி” என்கிற பெயரை மாற்ற ஜெயலலிதாவால்கூட முடியவில்லை. ஓரிரு தேர்தல்களில் அவர் வெற்றி வாய்ப்பு இழந்திருந்தாலும், வெகுஜன மக்கள் மத்தியில் அவர் கதாநாயகனாகவே பார்க்கப்பட்டார். அது திமுகவிற்கும் மிகப்பெரிய பலத்தை கொடுத்தது.

திமுக எதிர்க்கட்சியாக இருந்து ஆட்சிக்கு வர முயற்சி செய்யும் ஒவ்வொரு காலகட்டத்திலும், அந்தத் தேர்தலுக்குமுன் திருப்புமுனை மாநாட்டை திருச்சியில் நடத்த விரும்புவார்கள் முன்னாள் தலைவர் கலைஞரும் இன்றைய தலைவர் முத்துவேல் கருணாநிதியும். பொறுப்பை நேருவிடம் ஒப்படைத்து விடுவார்கள். அவர் பார்த்துக் கொள்வார் என்பது அவர்களின் நம்பிக்கை. நேருவும் சூரியனைப் போல் சுழல்வார்; திமுகவின் ஆட்சி அமைய அந்த மாநாடும் திரளும் கூட்டமும், அனல் பறக்கும் பரப்புரைகளும் அரசியலையே மாற்றும் திறன் கொண்டவையாக அமையும். திருச்சியில் முதல் முதலாக ‘கலைஞர் அறிவாலயம்’ என்கிற கட்சிக் கட்டடத்தை அமைத்தவர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. இப்படி அரசியலில் இவர் கால்பதிக்காக களம் இல்லை, செய்யாத புதுமைகளே இல்லை என்கிற அளவிற்கு இவரது கட்சிப் பணிகள் நிலைத்திருக்கின்றன. திருச்சியின் வெகுஜன மக்கள் மத்தியில் இவரின் கதாநாயகப் பிம்பம் நிலைத்து நிற்பதால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அசைக்க முடியாத தளபதியாக, மாவட்ட செயலாளராகவும் மாநில பொறுப்பாளராகவும் அவரை அமர்த்தி அழகு பார்க்கிறது கட்சித் தலைமை.

பொதுவாகவே திமுகவின் அரசியல் வரலாற்றில், ஆட்சியில் அமைச்சராக இருப்பதை விட கட்சியில் மாவட்ட செயலாளராக இருப்பதுதான் பெருமதிப்பிற்குரிய இடமாக கருதப்படும். அந்த அளவிற்கு அந்தக் கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு பெரும் அதிகாரமும் தலைமை அவர்களுக்கு வழங்கும் இந்த சுதந்திரம் இந்திய அளவில் வேறு எந்தக் கட்சிக்கும் இல்லாத சிறப்பாக கடந்த 80 ஆண்டுகளாக பார்க்கப்படுகின்றது. திமுகவின் மாவட்ட செயலாளர் என்பது சமூகத்தில் அரசியலில் எல்லைகளை தாண்டிய அதிகார அமைப்பாகவும் ஆளுமைக்குரிய இடமாகவும் உள்ளது என்பது அரசியலில் அதிசயமான உண்மை. தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் இப்படி ஒரு கட்சிப் பொறுப்பாளர்களுக்கான ஜனநாயகமும் அதிகாரமும் இதற்கு முன் இருந்ததில்லை; இதற்குப் பிறகும் இது தொடர வாய்ப்பில்லை; குறிப்பாக இனி அது திமுகவிற்கே சாத்தியம் இல்லை. இப்படி அதிகாரம் மிக்க பணிகளில் தொடர்ந்து செயல்படுவது என்பது கட்சி எல்லைகளை தாண்டி வெகுஜனங்களில் எளிய அணுகுமுறை இருந்தாலேயே சாத்தியம். 25 மாவட்டங்கள், 30 மாவட்டங்கள் என்கின்ற சூழ்நிலைகளிலும், மாவட்ட எல்லைகள் சுருங்கியபின்பும் பலர் மாவட்ட செயலாளர்களாக திமுகவில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் — குறிப்பாக சேலம் வீரபாண்டி ஆறுமுகம், தஞ்சை கோசி மணி போன்றவர்கள் கலைஞரின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக 40 ஆண்டுகள் பணியாற்றியவர்கள். இன்னும் சிலர் இருந்திருந்தாலும், வைகோ தலைமையிலான மதிமுக பிரிந்தபோது அவரோடு மிகப்பெரிய கள செயல்வீரர்களாக இருந்த சிலர் சென்றுவிட்டனர்; குறிப்பாக மதுராந்தகம் ஆறுமுகம் போன்றவர்கள். அந்த வரிசையில் தற்போதும் மிக முக்கியமான தளபதியாக ஐ. பெரியசாமி போன்ற சிலர் இருந்தாலும், அவர்களில் பிரதானமாக, மிக முக்கியமாக, முன்னணியில் — இன்னும் சொல்லப்போனால் முதன்மை மாவட்ட செயலாளராக நேரு இருப்பதாகவே நிலவரங்கள் உறுதிபட தெரிவிக்கின்றன. ஆளுமை, செயல்படும் வேகம் அனைத்திலும் அவர் காட்டும் ஈடுபாடு தான் அதற்குக் காரணம். தற்போது அவர் தலைமை கழக ‘முதன்மை செயலாளராக’ இருந்தாலும், மத்திய மாவட்டங்களின் அடையாளமாக தொடர்ந்து திகழ்வதும், திருச்சியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதும், “எவர்கிரீன் கிங் நான் தான்” என்பதை அவர் மறுபடியும் நிரூபித்துக் காட்டுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here