தமிழ்நாடு அரசியலில் ஓ.பன்னீர்செல்வம் (OPS) அமைதியானவர் ஆர்ப்பாட்டம் இல்லாத அரசியல்வாதி என்றாலும் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக திகழ்பவர். மூன்று முறை முதல்வராக இருந்தவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய முகமாக இருந்தவர். அமைதியும் பொறுமையும் அவரது அரசியல் பயணத்தின் அடையாளமாக இருந்தாலும், அவரது தனித்துவம், ஜெயலலிதாவுக்கு அவர் காட்டிய விசுவாசம், மக்களுடன் நெருக்கமான இயல்பு ஆகியவை அவரை தனித்துவமான அரசியல் ஆளுமையாக மாற்றுகின்றன. அவரது மக்கள் செல்வாக்கு அவர் இன்னும் அரசியலில் எவ்வளவு முக்கியமானவர் என்பதைக் மீண்டும் விவாதத்திற்குக் கொண்டு வந்துள்ளன.
ஜெயலலிதா பதவியிலிருந்து விலக வேண்டிய கட்டாய தருணங்களில்
அதிமுகவின் நலனுக்காகவும், ஜெயலலிதா அவர்மீது வைத்திருந்த நம்பிக்கையினாலுமே OPS முதல்வர் பொறுப்பை ஏற்றார். அவர் மீண்டும் ஜெயலலிதாவிடம் பதவியை உடனே ஒப்படைத்தது, அரசியல் வரலாற்றில் விசுவாசத்தின் உச்ச அடையாளமாக இன்று வரை பேசப்படுகின்றது. இப்படி ஒரு நிகழ்வு இனி அரசியல் வரலாற்றிலும் நிகழ்வதற்கு வாய்ப்பும் இல்லை
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உள்பிளவுகள், சசிகலா அணியின் எழுச்சி, அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமை குதிரை பேரங்களால் வலுப்பெறுதல் ஆகிய காரணங்களால் ஒபிஸ்க்கு பின்னடைவு ஏற்பட்டது போல் தோற்றமளித்தது ஆனாலும் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல், கடந்த மக்களவைத் தேர்தலில் ‘இரட்டை இலை’ சின்னமின்றியே, ராமநாதபுரம் தொகுதியில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர் தனது தனிப்பட்ட அரசியல் செல்வாக்கை OPS ஏற்கனவே நிரூபித்தவர்.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் இது தென்மாவட்டங்கள் முழுவதும் நிச்சயம் எதிரொலிக்கும்
இன்றைய அரசியல் சூழலில், OPS பாஜக கூட்டணியிலிருந்து விலகியிருப்பது ஒரு பெரிய மாற்றமாகவே பார்க்கப்படுகிறது. இது சாதாரண முடிவு அல்ல. குறிப்பாக தென் தமிழகத்தில் தன்னுடைய அடிப்படை வாக்குவங்கியை வலுப்படுத்த பாஜக முயன்று வரும் நிலையில், OPS விலகல் என்பது அந்தக் கட்சிக்கு நேரடியான அரசியல் அதிர்ச்சியாகும்.
தென் மாவட்டங்களில் OPS-ன் பலம்
மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி போன்ற முக்கிய தென் மாவட்டங்களில் OPS இன்னும் கணிசமான ஆதரவைக் கொண்டிருக்கிறார் வெகுஜன மக்கள் மத்தியில் இந்தப் பகுதிகளில் அதிமுகவும் பாஜகவும் தனித்தனியாகவோ, கூட்டணியாகவோ இருந்தாலும் ஆழமான அடிப்படை செல்வாக்கை நிச்சயம் ஓபிஎஸ்ன் தனிப்பட்ட செல்வாக்கு ஆட்டம் காணவைக்கும்.OPS-ன் சமூகத் தொடர்புகளும், தனிப்பட்ட நற்பெயரும் இந்த மாவட்டங்களில் இன்னும் வலுவாகவே நிலைத்திருக்கின்றன.
OPS வரவிருக்கும் தேர்தல்களில் தனியாக போட்டியிட்டாலோ அல்லது வேறு கூட்டணியில் சேர்ந்தாலோ, அதிமுக கூட்டணியின் வாக்குவங்கியில் பெரிய பிளவு ஏற்படுவது உறுதி.
அதேபோல், தென் மாவட்டங்களில் பாஜக வளர்ச்சிக்கும் கடுமையான பின்னடைவு ஏற்படும்.
அதிமுக–பாஜக கூட்டணியின் மொத்த வாக்கு சதவீதம் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.
இதன் விளைவாக, திமுகக்கு தேர்தல் வெற்றிக்கான பாதை மேலும் எளிதாகும் சூழலும் உருவாகலாம்.
OPS என்ற பெயர் தென் தமிழகத்தில் இன்னும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அவரது அரசியல் அடையாளம் இன்னும் அழியவில்லை என்பதை வருகின்ற 2026 தேர்தல் நிச்சயம் உணர்த்தும் என்றே கள நிலவரம் சொல்கின்றது.
அடுத்த அரசியல் அத்தியாயம்
பாஜக கூட்டணியிலிருந்து OPS விலகியிருப்பது, தனது தனித்துவ அரசியல் அடையாளத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில்தான் இந்த முடிவின் உண்மையான அரசியல் தாக்கம் தெளிவாக வெளிப்படும்.
இந்த அரசியல் மறுசீரமைப்பு, அதிமுகவுக்கும், அதிமுக–பாஜக கூட்டணிக்கும் கடுமையான சவால்களை உருவாக்கும் என்பது உறுதி.
– திராவிட ஜீவா




