Friday, April 17, 2026
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தீப்பொறி 'சுதா கொங்கரா'

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தீப்பொறி ‘சுதா கொங்கரா’

என்னதான் முற்போக்கு பேசினாலும், பெண் சுதந்திரங்கள் பேசினாலும், எண்பதுகளிலேயே சுகாசினி போன்ற இயக்குநர் கனவில் வந்த பெண்களை நடிகை என்கிற திசைக்கு மாற்றியது சற்றேறக்குறைய ஆணாதிக்க சிந்தனைதான். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று அழைக்கப்படுகின்ற அமெரிக்காவில்கூட பெண்கள் ஆள்வதை விரும்பாத ஆணாதிக்க மனோபாவ சிந்தனைதான் உள்ளதாக விமர்சனம் இருக்கின்றது. பெண்களின் முன்னேற்றத்தையும் பாலின சமத்துவத்தையும் தடுக்கும் சக்திகள் ஆண்கள்தான் என்பது உளவியல் உண்மை. இப்படி ஆட்சி அதிகாரத்தில் மட்டுமல்ல, ஆண்கள் கோலோச்சும் எந்தத் துறையாக இருந்தாலும் அதில் பெண்கள் நுழைவதே சாதனையாகப் பார்க்கப்படுகின்றது.

ஒருவேளை சுகாசினி இயக்குநர் அவதாரம் எடுத்திருந்தால், எண்பதுகளில் தொடங்கி இன்று வரை இயக்குநர் கனவிலிருந்த பெண்களுக்கு மிகப்பெரிய ரோல் மாடலாகவும் ஒரு சக்தியையும் கொடுத்திருக்கும். சராசரி பெண்களுக்கும் ஒரு உத்வேகமாக இருந்திருக்கும். விஜயலட்சுமி போன்ற ஒளிப்பதிவாளர்கள் சினிமாவில் இருந்தாலும், பொதுவெளியில் அவர்களால் ஒரு உச்ச இயக்குநராகவோ ஒளிப்பதிவாளராகவோ பிரபல இயக்குநராகவோ மிளிர முடியவில்லை என்பதுதான் சமூக அமைப்பு. அப்படியே பெண் இயக்குநர்கள் வந்தாலும் கூட, அவர்களால் சராசரி சினிமாவை தாண்டி தொடர்ந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.

இதுபோன்ற சிக்கல்களையும் சமூக அமைப்பில் புரையோடிப்போன கூற்றுக்களையெல்லாம் உடைத்து தீப்பொறிபோல் கிளம்பியவர்தான் இயக்குநர் சுதா கொங்கரா. தன்னுடைய இளம் வயதிலேயே ஆங்கிலப்படத்தின் திரைக்கதையை எழுதி இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர். மணிரத்னம் போன்ற இந்திய சினிமாவையே ஆட்சி செய்த ஜாம்பவான் இயக்குநர் இவரின் அகத்திய திறமையைப் பார்த்து தன்னிடம் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார். ஏழு ஆண்டுகள் மணிரத்னத்துடன் பணியாற்றியவர்,தெலுங்கில் முதலில் படம் இயக்கியவர் பின்னர் ‘துரோகி’ என்கிற இந்தி மற்றும் தமிழில் வெளியான படத்தை இயக்கினார். வணிகரீதியாகப் பெரிய வெற்றியை அடையவில்லை என்றாலும், கதை மற்றும் திரைக்கதை அமைப்புகள் பரவலாகப் பாராட்டைப் பெற்றது.

இரண்டாவதாக அவர் இயக்கிய ‘இறுதிச்சுற்று’ வணிக ரீதியில் வெற்றியடைந்தது. மாதவன்–ரித்திகா சிங் இருவரின் புதிய பரிமாணத்தைக் காட்டியதுடன், ரித்திகா சிங் என்கிற புதுமுக நடிகையை தமிழ் சினிமாவை உற்றுப் பார்க்கவைத்தது. சாதிக்கத் துடிக்கும் பெண் என்கிற தனது தனிப்பட்ட வாழ்க்கையின் போராட்டங்களைக் குத்துச்சண்டை வீராங்கனை வடிவில் திரைக்கு கொண்டு வந்தார் லட்சிய தீப்பொறி சுதா. படத்தின் காட்சி அமைப்புகள் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. யதார்த்த இயக்குநர் போல படத்தை இயக்கியிருந்தாலும், அதன் காட்சி அமைப்புகள் மற்றும் வசனங்கள் அவருடைய சொந்த வாழ்க்கை போராட்டங்களைப் பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தது.

அதைவிட சுதா அடுத்து இயக்கிய ‘சூரரைப் போற்று’ படம் நேரடியாக தியேட்டரில் ரிலீஸ் ஆகாமலேயே ஓ டி டியில் புதிய வரலாற்று வெற்றியை பெற்றது. தமிழ் சினிமாவின் வரலாற்றில் கதை, காட்சி அமைப்புகள், வசனங்களுக்காக பேசப்படும் படங்கள் பட்டியலில் இணைந்ததுடன் மட்டுமல்லாமல், புதிய தொழில்நுட்பங்களைத் தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்த ஒரு முக்கியமான படமாக அமைந்தது. ஒரு பெரிய நடிகரின் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் ஓடிடியில் ரிலீஸ் செய்யும் துணிச்சலான முடிவுக்காகவும் இந்த படம் பேசப்பட்டது. இரண்டு படங்களிலும் கதாநாயகியின் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு இணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அபர்ணா பாலமுரளி காலம் கடந்தும் வசனத்திற்காகவும் நடிப்புக்காகவும் போற்றப்படும் கதாநாயகியாக பேசப்படும் அளவுக்கு அதை சிறப்பாக வடிவமைத்திருந்தார் சுதா. ஒவ்வொரு படங்களின் கதாநாயகிகளின் உருவத்திலும் சுதா தெரிந்தார்.

இப்படி தனது படங்களில் முற்போக்கு கருத்துக்களை இயல்பாக, யதார்த்தமாக வடிவமைப்பதில் தனது குருவான மணிரத்னம் என்கிற ஜாம்பவான் இயக்குநரின் முன்னோடியான மகேந்திரனின் சாயலை பார்க்க முடிகிறது. குருவை மிஞ்சிய சிஷ்யன்தான் சுதா என்பதை நிரூபித்தவர். சுதாவின் பல வசனங்கள் காலமாற்றத்தில் நவீன சமூக அமைப்பில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களின் புதிய வடிவமே அதன் வெளிப்பாடு. அன்று மகேந்திரனின் ‘காளி’ என்கிற ஆண் கதாபாத்திரம் இருந்தது; இன்று இறுதிச்சுற்றின் ரித்திகாவும் சூரரைப் போற்றின் பொம்மியும் நவீனமாக வடிவமைக்கப்பட்ட காளியின் பெண் கதாபாத்திரங்களே. எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளிலும் மகேந்திரன் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல, ஒரு பெண் இயக்குநராக இங்கு தாக்கத்தை ஏற்படுத்தும் தீப்பொறியாக உருவெடுத்திருக்கிறார் சுதா கொங்கரா.

இப்படி முக்கியமான கதாபாத்திரங்களைத் தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கும் சுதா, தற்போது கையில் எடுத்திருக்கும் தமிழ் சினிமாவின் வரலாற்றையும் அரசியலையும் தலைகீழாகப் புரட்டிய புரட்சித்தலைப்பான பராசக்தியைத் தேர்வு செய்தது திரையுலகிலும் அரசியல் உலகிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பராசக்தி என்ற தலைப்பே தமிழ் சினிமாவையும் அரசியலையும் புரட்டிப் போட்ட தலைப்பு. தற்போது அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கதைக்களம் இதைவிட அதிக அனல் கிளப்பும், எரிமலையையே வெடிக்கவைக்கும் என தகவல்கள் உறுதியாக தெரிவிக்கின்றன.

சுதாவின் படங்கள் முற்போக்கையும் லட்சியத்தையும் பேசும் வகையில் இருக்கும். பராசக்தியில், இந்திய ஒன்றிய அரசியலின் மூல அரசியலாக இருந்து வரும் மொழித் திணிப்பு போராட்டக் களத்தை அவர் கையில் எடுத்திருப்பது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களின் தாக்கமே இல்லாத காலகட்டத்திலேயே எழுந்த மொழிப் போராட்டத்தின் துளிகளை வைத்து இன்று புதிய பராசக்தி உருவாகிறது. இது சினிமா மற்றும் அரசியல் களத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறும்.

இதற்கெல்லாம் சிகரமாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்குப் பிறகு தமிழ் சினிமாவின் கமர்ஷியல் மற்றும் கதையின் நாயகனாக உருவெடுத்திருக்கும் சிவகார்த்திகேயன் நடித்திருப்பது இந்தப் படத்திற்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. பழைய பராசக்தி தமிழ் சினிமாவை மாற்றியதைப் போல, புதிய பராசக்தி சமூக வலைத்தள காலத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு மொழி உணர்வை மீண்டும் வளர்க்கும். சிவகார்த்திகேயனின் அடுத்த பரிணாமத்தை அடையாளப்படுத்துவதுடன், சுதா என்கிற தீப்பொறியும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அடையாளமாகத் தடம் பதிப்பார் என்று தீர்க்கமாக நம்பலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments