கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சினுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடிய ஒரு மாபெரும் தலைவன் எம்.எஸ்.தோனி. மிஸ்டர் கூல், கூல் கேப்டன், பெஸ்ட் பினிஷர், தல என பல பட்டங்களில் ரசிகர்கள் இவரை இன்றும் கொண்டாடி வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவரின் உழைப்பும், அர்ப்பணிப்பும் மட்டுமே முதன்மையாக இருக்க முடியும்.
கிரிக்கெட்டுக்கு என்ன செய்தார் தோனி ?
ஒரு காலகட்டத்தில் சச்சின் ஆட்டமிழந்தால் இந்தியா தோற்றுவிடும் என நினைத்து தொலைக்காட்சியை ஆப் செய்துவிட்டு போன ரசிகர்கள் ஏராளம் என்பது வரலாறு, ஆனால் அந்த வரலாற்றை மாற்றி எழுதிய மாவீரன் தோனி என்று சொன்னால் அது மிகையாகாது. சச்சின் ஆட்டமிழந்தால் என்ன, உலகத்தின் பெஸ்ட் பினிஷர் தோணி களத்தில் இருக்கும் வரை இந்திய ரசிகர்களின் நம்பிக்கையும் தழைத்தோங்கி இருந்ததுmஇந்திய கிரிக்கெட் அணிக்காக அவர் அறிமுகமான காலத்தில் சரியாக விளையாட தெரியவில்லை, சிறப்பான கிரிக்கெட் ஷாட்டுகளை அடிக்க தெரியவில்லை என்பது போன்ற எண்ணற்ற விமர்சனங்கள் இவர் மீது வைக்கப்பட்டது, ஆனால் பிற்காலத்தில் தன்னை விமர்சனம் செய்த்தவர்களே வியந்து பாராட்டும் அளவிற்கு அவரின் புகழ் வானளவு உயர்ந்தது. கிரிக்கெட் தான் தோனியின் அடையாளம் என்பதை மாற்றி தோனி தான் இன்றைய கிரிக்கெட் உலகிற்கு முக்கிய அடையாளாக திகழ்கிறார். இந்திய கிரிக்கெட்டில் மட்டும் இல்லாமல் உலக கிரிக்கெட்டில் தனக்கென தனி வரலாற்றை, சகாப்தத்தை, ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் மகேந்திர சிங் தோனி.
CSK சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னன்
2008ல் ஐபிஎல் தொடங்கப்பட்டபோது சி.எஸ்.கே அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார் தோனி. முதன்முறையாக மஞ்சள் ஜெர்சியில் நீண்ட தலைமுடியுடன் தோனியை பார்த்த சென்னை ரசிகர்கள் ஆர்பரித்துப்போனார்கள். 16 ஆண்டுகள் ஆகியும் அவர் மீது ரசிகர்கள் வைத்துள்ள அன்பும், பாசமும் இன்றும் துளி அளவு கூட குறையவில்லை என்பதுதான் ஆச்சரியம் கலந்த உண்மை .
சேப்பாக்கம் மட்டுமல்லாமல் இந்தியாவில் எந்த மைதானத்தில் தோனி களமிறங்கினாலும் ரசிகர்களின் ஆரவாரத்தாலும், கரகோஷத்தாலும், விண்ணை பிளக்கும் விசில் சத்தத்தாலும் வெளிநாட்டு வீரர்களே “யாருடா இவர்” என்று வியந்து பார்க்கும் அளவிற்கு ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடி போவார்.
எப்பேர்ப்பட்ட பதட்டமான சூழ்நிலையிலும் தன்னுடைய கூலான அணுகுமுறையால் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் காந்தம் இவர்.
விடைபெறுகிறாரா கிரிக்கெட் வித்தகன் ?
2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலும் , 2020ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தது அவரது ரசிகர்களை கண்ணீர் மல்க கலங்கடித்தது. அவர் தொடர்ந்து ஐபிஎல்-லில் ஆடுவார் என்பது மட்டுமே அவரது ரசிகர்களின் ஒரே ஆறுதல். வயது முதிர்வு காரணமாக 2022ல் தோனி ஐபிஎல்-லில் இருந்து ஓய்வு பெறுவார் என சமூக வலைதளைங்களில் பரவலாக விவாதிக்கப்ட்டது. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், உடல் பிரச்சனைகளையும் பெரிதுபடுத்தாமல் ரசிகர்களுக்காக இந்தாண்டு வரை ஐபிஎல்-லில் கலக்கி வந்தார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஏற்கனவே உச்சத்தில் இருந்து அவரின் புகழ் 2022ம் ஆண்டிற்கு பிறகு உச்சத்தின் சிகரத்தை அடைந்தது என்று தான் சொல்ல வேண்டும். தோனியை எப்படியாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரின் தரிசனத்திற்காக காத்திருக்க ஆரமித்தார்கள்.
குறிப்பாக 2024ல் சிஎஸ்கே ஆடிய அத்தனை போட்டிகளிலும் தோனி களமிறங்க வேண்டும் என்பதற்காக மற்ற வீரர்கள் விரைவாக ஆட்டமிழக்க வேண்டும் என வேண்டிக்கொள்ளும் அளவிற்கு அவர் மீதான காதல் ரசிகர்களுக்கு அதிகமானது. இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாட மாட்டார், ஓய்வு பெறும் முடிவை அவர் எடுத்துவிட்டார் என்பது போன்ற விவாதங்கள் தற்போது மீண்டும் பலமாக ஒலிக்க தொடங்கியுள்ளது.
முடிகிறதா சகாப்தம்?
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐபிஎல் 2025 ஏல விதிமுறைகளில் , ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்றும், தக்கவைப்பு முறை அல்லது RTM என எந்த முறையில் வீரர்களை எடுக்கலாம் என நிர்வாகங்களே முடிவெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் சர்வதேச போட்டிகளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற இந்திய வீரர்கள் UNCAPPED PLAYER ஆக கருதப்படுவார்கள் என்ற விதி மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. தோனியை விளையாட வைக்கவே பிசிசிஐ இந்த விதிமுறையை கொண்டு வந்ததாக சர்ச்சை எழுந்தது.
ஆனால் இதுகுறித்து நாங்கள் இன்னும் தோனியுடன் கலந்தாலோசிக்கவில்லை என சிஎஸ்கே அணியின் CEO காசி விஸ்வநாதன் தெரிவித்தது ரசிகர்களை மேலும் குழப்பாக்கியுள்ளது. இதனால் தோனி இந்தாண்டு விளையாடுவாரா ? அல்லது அவரின் சகாப்தம் முடிந்ததா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- நவீன் சரவணன்



