சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் வெளியாகிறது என்றாலே ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பொது மக்களுக்கும் பெரும் கொண்டாட்டமாக இருக்கும். பேனர்கள், தோரணங்கள், கட் அவுட்டுகள், மாலை, பாலபிஷேகம், வெடிச்சத்தம், விண்ணை பிளக்கும் ரசிகர்களின் ஆரவாரம் என படம் வெளியாகும் ஒவ்வொரு திரையரங்கும் திருவிழா கோலம் பூண்டிருக்கும். இப்படி ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “வேட்டையன்” திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
ரஜினி எனும் ஆச்சரியம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பஸ் கண்டக்டராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தையும், வில்லனாக தன்னுடைய திரை பயணத்தையும் தொடங்கிய சூப்பர் ஸ்டார் தன்னுடைய முதல் படமான அபூர்வ ராகங்கள் படத்தில் கேட்டை திறப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும் ஆனால் பின்னாளில் தன் வீட்டின் கதவு திறப்பதற்காக பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், அரசியல்வாதிகளும், பல லட்சம் ரசிகர்களும் காத்திருப்பார்கள் என ரஜினி அப்போது நினைத்துக்கூட பாத்திருக்கமாட்டார். ஒரு நடிகர் எப்படி 50 ஆண்டுகளாக மக்களின் அன்பையும், ஆதரவையும் முழுமையாக பெற்று அவர்களின் மனதில் முடி சூடா மன்னனாக திகழமுடியும் என்பது மிகப்பெரிய ஆச்சரியமே.
வசூல் சக்கரவர்த்தி!
சூப்பர் ஸ்டாருக்கு பிறகு சினிமாவில் அறிமுகமான அத்தனை நடிகர்களின் ஒரே இலக்குமே ரஜினி பட சாதனையை முறியடிக்க வேண்டும், ரஜினி படத்தின் வசூலை முந்த வேண்டும் என்பதாகத்தான் இருந்திருக்கும். ஆனால் ரஜினி என்னும் ராட்சச எரிமலையின் அருகில் கூட நம்மால் நெருங்க முடியாது என்பதை பின்னாளில் அவர்கள் உணர்ந்திருப்பார்கள். சூப்பர் ஸ்டார் படங்களின் வசூலை முறியடிக்க மற்றொரு சூப்பர் ஸ்டார் படத்தால் மட்டுமே முடியும் என்பதை சினிமா அறிந்த அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். பல நடிகர்கள் தங்களின் படம் வெற்றி பெற்றால் கொண்டாடுவதை விட இவரின் படங்கள் தோல்வியடைந்தால் பல மடங்கு கொண்டாடுவார்கள். ஆனால் ஏனோ தற்போது வரை அவ்வாறான கொண்டாட்டங்களை கொண்டாட சூப்பர்ஸ்டார் அவர்களுக்கு வாய்பளித்ததில்லை .
73 வயதிலும் ஒருவர் ஹீரோவாக நடிக்கிறார் என்பது ஆச்சரியமில்லை. ஆனால் இப்போதும் அவரின் புகழும், அவருடைய படங்களின் வசூலும் எட்ட முடியாத உச்சத்தில் இருப்பதே ஆச்சர்யம். இன்றிருக்கும் 2K இளைஞர்களுக்கு சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றி சொல்லும் சூப்பர்ஸ்டார் யார் என்பதை.
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வேட்டையன்
ரஜினியின் படம் குறித்த அறிவிப்பு எப்போதெல்லாம் வெளியாகிறதோ அப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் நாடுமுழுவதும் அதுதான் ட்ரெண்டிங்காக இருக்கும். “ஜெய் பீம்” படத்தின் மூலம் நம் அனைவரின் நெஞ்சங்களையும் கலங்கடித்த ஞானவேலின் அடுத்த படத்திற்கு ரஜினி எப்படி செட் ஆவார் என ரசிகர்கள் ஒருபக்கம் முணுமுணுக்க தொடங்கினாலும் மறுபுறம் தலைவரின் முடிவு தப்பாகாது என்ற உற்சாகத்தில் ரசிகர்கள் இப்படத்தை எதிர்பாத்திருந்தனர். ஆனால் அடுத்தடுத்த அப்டேட்டுக்களும், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு கூட்டியது.
அதன் பிறகு அனிருத் இசையில் வெளிவந்த “Manasilayo” பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக ரஜினியின் ஹூக் ஸ்டெப்பை அனைவரும் ரீ கிரியேட் செய்து சமூக வலைத்தளங்களை தெறிக்கவிட்டனர். கடந்த 20ம் தேதி வெளியான டீசரை பார்த்த ரசிகர்கள் எந்த இயக்குனர் இயக்கினாலும் இது ரஜினி படம் டா என்று சொல்லும் அளவிற்கு குதூகலித்து போனார்கள். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படத்தின் டிரெய்லர் அக்.2ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களையும், மக்களையும் கவர போகிறது என்பதை தெரிந்து கொள்ள நாம் அக்.10 வரை காத்திருக்க வேண்டும்.
- நவீன் சரவணன்




