அமெரிக்காவின் முன்னணி நாளிதழான வொஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வில்லியம் லூயிஸ், பெருமளவு பணியாளர் நீக்க முடிவுக்குப் பிறகு பதவி விலகியுள்ளார். நிறுவனத்தின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த “கடினமான முடிவுகள்” எடுக்கப்பட்டுள்ளதாக அவர் பணியாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அந்த நாளிதழ் தனது பணியாளர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கை நீக்கும் முடிவை அறிவித்தது. இதன் காரணமாக விளையாட்டு மற்றும் சர்வதேச செய்தி பிரிவுகளில் பெரிய அளவில் குறைப்புகள் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை பல பத்திரிகையாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுடன், நிறுவன உரிமையாளர் ஜெஃப் பெசோஸின் முடிவுகளும் விமர்சனத்துக்கு உள்ளாகின.
நிறுவனத்தின் நிதி இழப்புகளை கட்டுப்படுத்த முயன்ற லூயிஸ், 2023ஆம் ஆண்டு இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். ஆனால் பணியாளர் குறைப்புகள் மற்றும் சில சர்ச்சையான ஆசிரியர் முடிவுகள் காரணமாக ஊழியர்களும் வாசகர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு சேர்ந்த நிதி அதிகாரி ஜெஃப் டி’ஒனோஃப்ரியோ இடைக்கால தலைமை அதிகாரியாக பொறுப்பேற்கிறார்.
2013ஆம் ஆண்டு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இந்த நாளிதழை வாங்கியதிலிருந்து, பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன், பல தசாப்தங்களாக இருந்த பாரம்பரியத்தை முறித்து, எந்த வேட்பாளரையும் ஆதரிக்காது என்று முடிவு செய்தது வாசகர்கள் இடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆயிரக்கணக்கான சந்தாதாரர்கள் விலகியதாக கூறப்படுகிறது.
சமீபத்திய பணியாளர் நீக்கங்களும் தலைமை மாற்றமும், உலகின் முக்கிய செய்தி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் வொஷிங்டன் போஸ்ட் நாளிதழில் தொடர்ந்து நடைபெறும் மாற்றங்களின் இன்னொரு அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.

