ஏழை பணக்காரனானதும், ஏழைகளைப் பார்க்கவே விரும்புவதில்லையாம்!

“தம்பி, ஒரு கதை உண்டு. பரம ஏழையாக இருந்த ஒருவன், தேவாலயத்தின் அருகே பாதையில் நடந்து, பிச்சை எடுத்துக் கொண்டிருந்தானாம்! கந்தல் ஆடை, கையில் திருஓடு, கண்ணில் காமாலை, கைகால்களில் புண்-இந்தக் கோலத்தில். ஆண்டவனின் அடிபணிந்து அர்ச்சித்து அபிஷேக ஆராதனைகள் செய்வித்து, அருளைப் பெறுவதற்காகப் பிரபுக்கள் பட்டுடை அணிந்து பளபளக்கும் அணிபணிபூண்டு, பொன்னவிர் மேனியரோடு வண்டி வாகனங்களில் செல்வர்; இதைக் கண்ட பிச்சைக்காரன், மனம் நொந்து, “ஆண்டவனே! ஏதோ என்னை இல்லாதவ னாகவும், இவர்களைச் சீமான்களாகவும் படைத்துவிட்டாய். அதுவே அக்ரமம். அது போதாதென்று, இருவருக்கும் பொதுவாக ஒரு பாதையையும் அமைத்திருக்கிறாயே. ஏழைகள் செல்வதற்கு ஒரு பாதை, சீமான்கள் பவனிக்காக மற்றோர் பாதையாவது அமைத்திருக்கக் கூடாதா? என் கண்ணிலே, இந்தப் பளபளப்பும் மினு மினுப்பும், தகதகாயமும் தெரியாமல் இருந்தாலாவது, வேதனை குறையுமே!” என்று சொல்லிக் கொண்டானாம்.

எப்படியோ, அவன் ஒரு பெரும் சீமானாகிவிட்டான் – பட்டுடை! பரிமளகந்தம்! பல்லக்கு! பாவையர்! எல்லாம் கிடைத்துவிட்ட நிலை! பல்லக்கில் செல்கிறான். பரம ஏழையாக இருந்தவன், “பரம்பொருளின்’ அருள் பெற! பாதையிலே, பஞ்சை பராரி, ஏழை, நடைப்பிணம், கண்டான்! கண்களை இறுக மூடிக்கொண்டு, கலக்கத்துடன், “கடவுளே! இதென்ன கொடுமை? ஏன் இப்படிப்பட்ட “கோர’மான காட்சி என் கண்ணில் படும்படி செய்கிறாய்! நான் என்ன குற்றம் இழைத்தேன்! இறைவா! இந்த ஜென்மங்கள் எமது கண்களிலே தெரிந்து இதயத்தைத் தாக்காதிருக்கும் வண்ணம், இதுகளுக்கென்று ஒரு தனிப் பாதையும், உன் அருளைப் பெற்ற எமக்கென்று ஒரு தனிப் பாதையும், அமைத்துத்தரக் கூடாதா!” என்று இறைஞ்சினானாம்.

பஞ்சை பிரபுவானதும், பஞ்சைகளைப் பார்ப்பதும் வேதனை என்று எண்ணுகிறான் – அதற்காக ஆண்டவனிடம் கோபித்துக்கொள்கிறான்!

பஞ்சை பிரவுவானதும் அவன் மனதிலே எத்தகைய நஞ்சு நெளிகிறது பார், தம்பி!

– 29.05.1955, திராவிடநாடு

#ஏழை_பணக்காரன்
#சமூகநீதி
#சமூகசமத்துவம்
#ஏழைகளின்_வலி
#வறுமை
#பணக்கார_வர்க்கம்
#மனிதநேயம்
#சமத்துவ_சமூகம்
#சமூக_அநீதி
#திராவிட_சிந்தனை
#பெரியார்
#அண்ணா
#திராவிடநாடு
#சுயமரியாதை
#மனித_நேயம்
#சமூக_விழிப்புணர்வு
#வர்க்க_வேறுபாடு
#ஏழைகளின்_உரிமை
#SOUTHINDIANVOICE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here