ஏழிசை வேந்தர் தியாகராஜ பாகவதர், பி.யு. சின்னப்பா தொடங்கி எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் முதல் இன்று சிவகார்த்திகேயன், தனுஷ் வரை தமிழ் சினிமாவில் ரசிகர் மன்றங்களின் வரலாறு என்பது ஒரு தனித்துவமான பயணம். இந்த வரலாற்றில் தன்னெழுச்சியாக உருவான ரசிகர் மன்றங்களின் நாயகர்களாக முன்னிலை வகிப்பவர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன் போன்றவர்கள் அந்தந்த காலகட்டங்களில் முன்னணி நடிகர்களாகவும் தனிப்பட்ட ரசிகர்களைக் கொண்டவர்களாகவும் இருந்தாலும், எம்.ஜி.ஆர்., சிவாஜி அளவுக்கு அவர்களுக்குப் பெரிய ரசிகர் மன்றங்களோ, வலுவான அமைப்புகளோ உருவாகவில்லை என்பதுதான் திரையுலக வரலாறு.

1970-களின் இறுதியில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் என்று இருந்த வரிசை, காலப்போக்கில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று மாறிய பிறகு ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கையும், அவற்றின் அமைப்புகளும் புதிய வடிவத்தைப் பெறத் தொடங்கின. விஜயகாந்த், பாக்யராஜ், டி.ராஜேந்தர், ராமராஜன், பிரபுதேவா, விக்ரம், அஜித், விஜய் போன்றவர்களுக்கும் அந்தந்த காலகட்டங்களில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இருப்பினும், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோருக்கு இயல்பாக உருவானதைப் போன்ற ரசிகர் மன்றக் கட்டமைப்புகள் அனைவருக்கும் தன்னெழுச்சியாக உருவாகவில்லை. இதில் விஜயகாந்த் ஓரளவுக்கு விதிவிலக்கானவர். அவருக்கான ரசிகர் மன்றக் கட்டமைப்பும் எண்பதுகளில் திட்டமிட்டுச் செம்மைப்படுத்தப்பட்டது என்பதை அக்காலகட்டத் திரைத்துறையைக் கவனித்தவர்கள் அறிவார்கள். அதே நேரத்தில், விஜயகாந்துக்கு இருந்த தனித்துவமான மக்கள் செல்வாக்கையும் மறுக்க முடியாது.

தொண்ணூறுகளின் இறுதியில் ரசிகர் மன்றங்கள் விளம்பரத்திற்கும் திரைப்படங்களின் வணிக வளர்ச்சிக்கும் முக்கியமான கருவிகளாக மாறின. அந்தக் காலகட்டத்தில் பல நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டன என்பதும் திரைத்துறை ஆய்வாளர்கள் முன்வைக்கும் கருத்தாகும். இதில் அஜித்தும் விஜய்யும் விதிவிலக்கானவர்கள் அல்ல என்பதும், அவர்களது ரசிகர் மன்ற வளர்ச்சியில் திட்டமிட்ட அமைப்பாக்கத்திற்குப் பங்கு இருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த மாற்றங்களுக்கு மத்தியிலும் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றக் கட்டமைப்பும், ரசிகர்களின் எழுச்சியும் தொடர்ந்து இயல்பான மக்கள் ஆதரவுடன் வளர்ந்து வந்தது ஆச்சரியப்பட வைக்கும் உண்மை. 2000-களில் மூன்றாம் தலைமுறை நடிகர்களாக உருவெடுத்த தனுஷ், சிம்பு போன்றவர்களுக்கும் இயல்பான ரசிகர்கள் உருவானார்கள். அதே நேரத்தில், அவர்களது ரசிகர் மன்ற வளர்ச்சியிலும் சில இடங்களில் திட்டமிட்ட அமைப்பாக்கம் இடம்பெற்றது.

இதற்கடுத்த தலைமுறையில் சிவகார்த்திகேயன் போன்றவர்கள் வரும்போது, சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தன்னெழுச்சியாக ரசிகர்கள் உருவாகும் ஒரு புதிய சூழலைப் பார்க்க முடிகிறது. பல திறமையான நடிகர்கள் இருந்தாலும், குறுகிய காலத்தில் சிவகார்த்திகேயன் அடைந்த வளர்ச்சியும், தொடர்ச்சியான வெற்றிகளும், அவரைச் சுற்றி உருவான ரசிகர் மன்ற எழுச்சியும் தனித்துவமானவை. ரஜினிகாந்தின் அளவுக்கு அவரது ரசிகர் கட்டமைப்பு இன்னும் வளரவில்லை என்றாலும், தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ரஜினிக்கு அடுத்த தலைமுறையில் வலுவான மக்கள் ஆதரவையும் ரசிகர் எழுச்சியையும் பெற்றிருப்பவர்களில் சிவகார்த்திகேயன் முக்கியமானவர் என்பதை அவரது தொடர் வெற்றிகள் எடுத்துக்காட்டுகின்றன.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோரின் ரசிகர் மன்றங்களில் தன்னெழுச்சியாக உருவான ரசிகர்களை ஒருங்கிணைத்து, கட்டுக்கோப்புடன் செயல்பட வைத்த மன்றத் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மிகப்பெரிய பங்கு இருந்தது. எம்.ஜி.ஆர். முதலமைச்சரான பிறகு அவரது ரசிகர் மன்றச் செயல்பாடுகளில் ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் முக்கியப் பங்காற்றினர். சிவாஜி மன்றத்தில் அவரது தம்பி சண்முகம், பூமிநாதன், ராஜசேகரன் போன்றவர்கள் செயல்பட்டனர். கமல்ஹாசன் ரசிகர் மன்றத்தில் குணசீலன் போன்றவர்கள் அமைப்பை ஒருங்கிணைத்தனர். இந்த வரிசையில் விஜயகாந்தையும் குறிப்பிட வேண்டும். ஆனால், ரஜினிகாந்தின் ரசிகர் மன்றக் கட்டமைப்பு என்பது வேறொரு பரிமாணம் கொண்டது. இந்தியத் திரையுலகில் ஒரு திரைப்படத்தை எப்படிக் கொண்டாட வேண்டும், ஒரு கதாநாயகனின் திரைப்பட வெளியீட்டை எப்படித் திருவிழாவாக மாற்ற வேண்டும் என்பதற்கு ரஜினி ரசிகர் மன்றங்கள் புதிய இலக்கணத்தை உருவாக்கின. சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினியைப் பற்றிப் பொதுவெளியில் பேசுவதற்குக்கூட பலர் தயங்கிய காலகட்டங்களில், அவரது ரசிகர்களின் எழுச்சியும் கட்டுக்கடங்காத ஆதரவும் திரையுலகையும் அரசியல் தலைவர்களையும் உற்றுநோக்க வைத்தன. அத்தகைய மாபெரும் ரசிகர் கூட்டத்தை ஒருங்கிணைத்து, கட்டுக்கோப்புடன் வழிநடத்திய ஒற்றை ஆளுமையாக சத்தியநாராயணன் திகழ்ந்தார். அவருடன் கார்த்திகேயன், ரமேஷ், ராமதாஸ், சூர்யா, ரவிகாந்த் போன்றவர்களும் பல்வேறு காலகட்டங்களில் இணைந்து செயல்பட்டனர்.

இன்று அதேபோன்றதொரு ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பைச் சிவகார்த்திகேயனிடம் பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் ரஜினி ரசிகராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பயணித்த மோகன்தாஸ், இன்று ரஜினிக்கு அடுத்த தலைமுறையின் முன்னணி நட்சத்திரமாகவும் வசூல் வெற்றிகளைப் பெற்று வரும் நடிகராகவும் திகழும் சிவகார்த்திகேயனைச் சுற்றி இயல்பாக உருவான ரசிகர் கூட்டத்தை ஒருங்கிணைத்து வழிநடத்தி வருகிறார். செயல் புயல் என்று அழைக்கப்படும் மோகன்தாஸுக்கு நவநீதன், ஆனந்த் போன்றவர்கள் பக்கபலமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. நாள்தோறும் நற்பணிகள் செய்வோம் என்ற நோக்கத்துடன், ஆண்டு முழுவதும் தொடர்ந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் எண்பதுகளில் ரஜினி ரசிகர்கள் இயங்கிய முறையை நினைவுபடுத்துகின்றன. ஒரு நடிகரின் திரைப்படத்தை மட்டுமே கொண்டாடாமல், மக்கள் நலப் பணிகளிலும் ரசிகர்களை ஈடுபடுத்தும் இந்த அணுகுமுறை பாராட்டுக்குரியது.

இதில் இன்னொரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், மோகன்தாஸ் தனது இளமைக்காலத்தில் தீவிர ரஜினி ரசிகராகப் பயணித்தவர் என்பதுதான். ரஜினிகாந்துக்கு அவரது நீண்டகால ரசிகராக இருந்து ரசிகர் மன்றக் கட்டமைப்பை வலுவாக வழிநடத்திய சத்தியநாராயணன் அமைந்ததைப் போலவே, இன்று சிவகார்த்திகேயனுக்கும் அவரது ரசிகராக இருந்து இயக்கத்தை ஒருங்கிணைக்கும் மோகன்தாஸ் அமைந்திருப்பது ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுத் தொடர்ச்சியாகத் தெரிகிறது. ஒரு தலைமுறையின் ரஜினி ரசிகர், அடுத்த தலைமுறையின் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத் தலைவராக உருவெடுத்திருப்பது காலத்தின் அழகான மாற்றம் மட்டுமல்ல, ரசிகர் மன்ற வரலாற்றில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு புதிய அத்தியாயமும் கூட. ரஜினிக்கு ஒரு சத்தியநாராயணன் அமைந்ததைப் போல, சிவகார்த்திகேயனுக்கு ஒரு மோகன்தாஸ் அமைந்திருப்பது இயற்கையின் வரம் என்றே சொல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here