நடப்பாண்டில் 18 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவிப்பு.
இந்தியத் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) சார்பில் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்தும் வகையில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற மாநாட்டில் ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ஒன்றிய அரசு தொழில் துறையில் வளர்ச்சி அடையும் நோக்கில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி வளர்ச்சி நிதி ஒதுக்காக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது புத்தாக்க தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் 2 லட்சம் புத்தாக்க தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். புதிய புத்தாக்க தொழில் தொடங்க முன்வருபவர்களுக்குத் தொழில் துறையைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் உதவி செய்யத் தாயாராக உள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்தியாவில் இதுவரை 2 லட்சம் புத்தாக்க தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 21 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும், நடப்பாண்டில் இஸ்ரோ மூலம் 18 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்த உள்ளோம்” எனவும் தெரிவித்தார்.

