உலகக்கோப்பை 2024:

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் 9வது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 3 முதல் 20ம் தேதி வரை பங்களாதேஷில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதன்பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டது

பங்களாதேஷில் இருந்து மாற்றப்பட்டது ஏன் ?

பங்களாதேஷில் தற்போது நிலவும் அரசியல் பிரச்சனைகளுக்காகவும், அமைதியின்மைக்காகவும் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டது . இருப்பினும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஹோஸ்டிங் உரிமையை இன்னும் வைத்திருக்கிறது.

எந்தெந்த குழுவில் எந்தெந்த அணிகள்?

ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் A பிரிவிலும்,
பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் B பிரிவிலும் இடம்பெற்றுள்ளது

அட்டவணை எப்படி ?

10 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட நிலையில், லீக் சுற்றில் A & B பிரிவுகளில் இடம்பெற்றுள்ள அணிகள் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் மோதும். லீக் சுற்றில் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் மகுடத்திற்காக போராடும்.

இந்திய அணி எப்படி ?

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ்ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் விளையாட இருப்பதால் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்களான ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் நல்ல பார்மில் இருப்பது கூடுதல் பலம். அதே சமயத்தில் மிடில் ஆர்டரில் ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோரின் பங்களிப்பு வெற்றிக்கு மிகவும் அவசியம். ஆனால் சமீபகாலமாக இவர்கள் ரன் குவிக்க தடுமாறுவது சற்று கவலை அளிக்கிறது. பந்துவீச்சை பொறுத்தவரை ரேணுகா சிங்கின் பார்ம் அணிக்கு பெரிய பலவீனமாக உள்ளது. மத்தபடி மற்ற பௌலர்கள் நல்ல பார்மில் இருப்பது அணிக்கு மேலும் பலம்.

அரையிறுதிக்கு செல்ல தகுதியுள்ள அணிகள் எவை ?

A பிரிவை பொறுத்தவரை ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே அரையிறுதிக்கு செல்ல கடும் போட்டி நிலவும். B பிரிவை பொறுத்தவரை மற்ற அணிகள் பலவீனமாக இருப்பதால் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு மிகப்பெரிய ஜாக்பாட். பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் அணிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களும் சில அதிர்ச்சி வைத்தியங்களை கொடுக்கலாம்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன ?

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆடவருக்கான டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்தது. இந்நிலையில் இதுவரை டி20 உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றதில்லை என்ற சோகத்தை உடைத்தெறிந்து இம்முறை சாதனை படைக்க காத்திருக்கிறார்கள் நம் சிங்கப்பெண்கள்.

  • – நவீன் சரவணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here