இசைஞானி இளையராஜா இசையமைப்பில், இயக்குநர் அமீரின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இராம்.நா இயக்கத்தில் புதிய திரைப்படம் உருவாகிறது. சூர்யா, லைலா நடிப்பில் பாலா இயக்கிய நந்தா, சூர்யா, திரிஷா நடிப்பில் அமீர் இயக்கிய மௌனம் பேசியதே ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த அபராஜீத் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது. அமெரிக்காவில் வசிக்கும் தயாரிப்பாளர் கணேஷ் ரகு இப்படத்தைப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
அபராஜீத் பிலிம்ஸ் நிறுவனம், பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த நந்தா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தது. தொடர்ந்து, பாலாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அமீரை, சூர்யா, திரிஷா நடித்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கத்தில் தனது மூன்றாவது தயாரிப்பைத் தொடங்கியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் கோவையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படத்தின் தொடக்க விழாவில் இயக்குநர் சேரன் ‘கிளாப் இன்’ சொல்ல, நடிகரும் இயக்குநருமான சசிக்குமார் ‘கேமரா ஆன்’ செய்தார். இயக்குநர் அமீர் கிளாப் அடிக்க, இயக்குநர் பாலா ‘ஆக்ஷன்’ சொல்லி முதல் காட்சியைப் படமாக்கினார். இந்நிகழ்வில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் சிவகுமார், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, பூர்ணிமா பாக்யராஜ், இயக்குநர் கரு. பழனியப்பன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நந்தா, மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில், அபராஜீத் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்புக்கு முதன்முறையாக இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். நெகிழ்ச்சியான கதைக்களத்துடனும், ஊக்கமளிக்கும் திரைக்கதையுடனும் இப்படம் உருவாகிறது. வாஞ்சி முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, பரதன் வசனம் எழுதுகிறார். பாலுமகேந்திரா கலை இயக்கத்தைக் கவனிக்க, பூபதி வேதகிரி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். மீரா ஆடை வடிவமைப்பையும், பாலு ஸ்டில்ஸ் புகைப்படப் பணிகளையும், பழநி அமாவாசை உடை அலங்காரப் பணிகளையும் கவனிக்கின்றனர். ஹரிஷ் ஒலிக்கலவையையும், நிகில் முருகன் மக்கள் தொடர்புப் பணிகளையும், கோபி பிரசன்னா விளம்பர வடிவமைப்பையும் மேற்கொள்கின்றனர். நிர்வாகத் தயாரிப்புப் பணிகளை விஜயகுமார் ஆர்.எஸ். மற்றும் காசி வர்மன் கவனிக்கின்றனர்.
இப்படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திறமையான இயக்குநர்களையும் கலைஞர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பளித்து வரும் அபராஜீத் பிலிம்ஸ் நிறுவனம், தனது மூன்றாவது தயாரிப்பின் மூலம் அந்தப் பயணத்தைத் தொடர்கிறது. இளையராஜாவின் இசை, அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, புதிய இயக்குநரின் முயற்சி எனப் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்தப் புதிய திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.



