கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட மரகதம் குமரவேல், வாக்களித்த மை காய்வதற்குள் மதுராந்தகம் தொகுதி மக்களுக்கு அதிர்ச்சியை அளித்தார். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்குச் சென்றது ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. இதுவரை தமிழகம் கண்டிராத அரசியல் அவலம் என்று பல்வேறு தரப்பினரும், வெகுஜன மக்களும் கூட இதை விமர்சிக்கத் தொடங்கினார்கள். வடமாநிலங்களில் பாஜக செய்வதை, கட்சி ஆரம்பித்த இரண்டே வருடங்களில் நடிகர் விஜய் செய்தது மக்களிடையே ஒருவித ஒவ்வாமையையும், வெறுப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
ஏழு தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் மட்டும் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். இந்த இரண்டும் தனித் தொகுதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் நடிகர் விஜய்யின் செல்வாக்கு ஒட்டுமொத்தமாக தலித் பகுதிகளில் எவ்வாறு இருக்கின்றது என்பதை இந்தத் தேர்தல் நிச்சயம் வெளிப்படுத்தும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஒடுக்கப்பட்ட மக்களிடையே மிகப்பெரிய தலைவராக இருப்பது, கட்சி எல்லைகளைத் தாண்டி ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அவர் பின்னால் திரண்டது, கட்சியின் 30 ஆண்டு கால வரலாறு. ஆனால், இந்த இடைத்தேர்தலில் அவர் பல்வேறு விமர்சனங்களுக்கு இடையில் நடிகர் விஜய்யை ஆதரித்திருப்பது, அவர் மீதான அரசியல் பார்வையையே கேள்விக்குள்ளாக்கி இருப்பதும் உண்மை.

தாராபுரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் அவ்வளவு பலமாக இல்லை என்றாலும் கூட, மதுராந்தகம் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்தபோது தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் பெற்ற வாக்குகள் 11 ஆயிரம். இதில் பெரும்பான்மை வாக்குகள் விடுதலைச் சிறுத்தைகள் வாக்குகள் என்று எடுத்துக்கொண்டாலும் கூட, பத்தாயிரம் வாக்குகள் உறுதியாக விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்திற்கு இருப்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் த வெ க கூட்டணியில் இருப்பதால் மற்ற சமூக வாக்குகள் விஜய் கட்சிக்கு விழுவது கொஞ்சம் சந்தேகம்தான் என்பதையே கள நிலவரங்கள் உணர்த்துகின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் கட்சி வாங்கிய வாக்குகள் அப்படியே இந்த முறை விழுமா என்பதும் சந்தேகத்திற்குரியதுதான். களப்பணியில் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் இயங்கினாலும், கட்சி கட்டமைப்பு என்பது அறவே இல்லாத தொகுதியாகத்தான் சென்னைக்கு அருகில் உள்ள மதுராந்தகம் தொகுதியிலேயே தவெக நிலையாக இருக்கின்றது. இது பரிதாபத்திற்குரிய ஒன்றுதான். தற்போதைய கள நிலவரத்தைப் பார்த்தால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலேயே நடிகர் விஜயின் கட்சி 40 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் எப்படி வாங்கியது என்கின்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

40 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வாங்கிய ஒரு கட்சி இடைத்தேர்தலில் திணறுவதைப் பார்த்தால், இந்தத் தேர்தல் முறையிலேயே பலவித சந்தேகங்கள் எழுவதைத் தவிர்க்கவே முடியாது. நடிகர் விஜயின் கட்சிக்கான வாக்குகள் தன்னெழுச்சியாக விழுந்தது, சாதி, மதம் பார்க்காமல் மாற்றத்திற்கான வாக்குகள் என்கின்ற மாய பிம்பம் உருவாக்கப்பட்டதோ என்கிற கேள்விகளும் எழுகின்றன. 40 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வாங்கிய ஒரு கட்சியை மூன்று மாதங்களில் மக்கள் விரட்டி அடிப்பது, அவர்கள் வாங்கிய வாக்குகளிலேயே ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இதைத்தான் கள நிலவரங்களும் உறுதியாகவே சொல்கின்றன. சுமார் 20 ஆயிரம் வாக்குகளை வாங்குவதற்கே அந்தக் கட்சி பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கிறது என்பதே தற்போதைய கள நிலவரம்.
தற்போதைய சூழ்நிலையில், அடிப்படை வாக்கு வங்கிகளுடன் திமுக களத்தில் வெகுதூரம் முன்னோக்கிச் செல்கின்றது என்பதையே பிரதிபலிக்கின்றது. அதிமுகவும் சளைக்காமல் திமுகவிற்குப் போட்டியாக இருக்கின்றது. களம் திமுக vs அதிமுக என்றே இருக்கின்றது. தவெக 20 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வாங்கினால், அது நிச்சயம் மிகப்பெரிய ஒரு சாதனையாகத்தான் தமிழக அரசியல் வரலாற்றில் பதியப்படும். மொத்தத்தில், ஆளுங்கட்சியான நடிகர் விஜயின் கட்சியின் பிம்பம் இந்தத் தேர்தலில் உடைக்கப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.



