இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவியைப் பெறுவதற்காக ஒருவர் ஐந்து கோடி ரூபாய் கொடுக்க முன்வந்ததாக அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் தெரிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அவர்கள் கேள்வி எழுப்பியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. கலை, இலக்கியம், இசை, நாடகம் உள்ளிட்ட தமிழர் பண்பாட்டின் அடையாளங்களைப் பாதுகாத்து வளர்க்க வேண்டிய ஓர் உயரிய அமைப்பின் தலைவர் பதவிக்கு இவ்வளவு பெரிய தொகை கொடுக்க ஒருவர் முன்வந்ததாகக் கூறப்படுவது சாதாரணமான விஷயமல்ல. இந்தப் பதவியைப் பெறுவதற்கு ஐந்து கோடி ரூபாய் வரை பேரம் பேசும் நிலை உருவாகியிருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
அமைச்சர் குறிப்பிட்ட அந்த நபர் யார்? அவர் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர்? எந்தச் சூழலில் ஐந்து கோடி ரூபாய் கொடுக்க முன்வந்தார்? இந்தப் பணம் யாருக்குக் கொடுக்கப்பட இருந்தது? பதவியைப் பெறுவதற்காகப் பணம் கொடுக்க முன்வந்ததாக அமைச்சர் கூறுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? இவை அனைத்துக்கும் பொதுமக்களுக்குத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு அமைச்சருக்கு இருக்கிறது. இது வெறும் அரசியல் மேடைப் பேச்சாகக் கடந்து செல்லக்கூடிய குற்றச்சாட்டு அல்ல. அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை சார்ந்த முக்கியமான பதவியை மையமாகக் கொண்ட விவகாரம் என்பதால் இதன் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.
ஐந்து கோடி ரூபாய் கொடுக்க ஒருவர் முன்வந்ததாக அமைச்சருக்குத் தெரியவந்திருந்தால், அது தொடர்பாக ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது. அத்தகைய முயற்சி நடைபெற்றிருந்தால், அதுகுறித்து உரிய விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அரசு முன்வந்திருக்க வேண்டாமா? ஆதாரங்கள் இருந்தால் அவற்றை உரிய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைத்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
அமைச்சர்கள் என்பவர்கள் அரசின் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள். அவர்கள் தெரிவிக்கும் ஒவ்வொரு கருத்தும் பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, பேசுவதற்கு முன்பாக அதன் உண்மைத்தன்மையையும், பேசிவிட்ட பிறகு அதற்கான பொறுப்பையும் உணர்ந்து செயல்படுவது அவசியம். ஐந்து கோடி ரூபாய் கொடுக்க முன்வந்தவர் யார் என்பதை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அதேபோல், ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்கும் விளக்கம் அளிக்க வேண்டும். குற்றச்சாட்டை முன்வைப்பது மட்டுமல்ல, அதன் உண்மையை வெளிக்கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதும்தான் பொறுப்பான அரசியலுக்கும் நல்லாட்சிக்கும் அடையாளம்.என்று அவர் கூறியுள்ளார்
#பெசண்முகம் #மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி #அமைச்சர்ராஜ்மோகன் #இயல்இசைநாடகமன்றம் #ஐந்துகோடிரூபாய் #அரசுப்பொறுப்பு #வெளிப்படைத்தன்மை #சட்டநடவடிக்கை #நல்லாட்சி #அரசியல்பொறுப்பு #தமிழ்நாடு #SOUTHINDIANVOICE



