திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு–II (தொகுதி 2 மற்றும் 2ஏ) முதல் நிலைத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே. நல்லசிவன் தலைமையில் அக்டோபர் 30ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இத்தேர்வு நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்டத்தில் தேர்வு மையங்கள் அமைத்தல், தேர்வர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

திருப்பத்தூர் வட்டத்தில் 15 தேர்வு மையங்களில் 4,560 தேர்வர்களும், வாணியம்பாடி வட்டத்தில் 6 தேர்வு மையங்களில் 1,727 தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 21 தேர்வு மையங்களில் 6,287 பேர் இத்தேர்வில் பங்கேற்க உள்ளனர். தேர்வு மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதையும், தேர்வர்கள் எவ்வித சிரமமுமின்றித் தேர்வு எழுதுவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தேர்வர்களின் போக்குவரத்து வசதிக்காக திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து காலை 6 மணி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் தேர்வர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையங்களைச் சென்றடைவதற்கு இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேர்வு நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதை உறுதி செய்ய துணை ஆட்சியர் நிலையில் இரண்டு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் மூன்று பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்வர்கள் காலை 9 மணிக்கு மேல் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், கருப்பு நிறப் பந்து முனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்களுக்குள் மின்னணு சாதனங்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, மாவட்டக் கருவூல அலுவலர் வெங்கடராகவன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பிரிவு அலுவலர் முருகன், உதவிப் பிரிவு அலுவலர் காந்தி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குறிச்சொற்கள்:

#திருப்பத்தூர் #திருப்பத்தூர்மாவட்டம் #மாவட்டஆட்சியர் #தமிழ்நாடுஅரசு #அரசுப்பணியாளர் #அரசுப்பணியாளர்தேர்வாணையம் #குரூப்2 #குரூப்2ஏ #குரூப்2தேர்வு #குரூப்2ஏதேர்வு #அரசுப்பணிவாய்ப்பு #வேலைவாய்ப்பு #போட்டித்தேர்வு #தேர்வுமுன்னேற்பாடுகள் #தமிழ்நாடுஅரசுப்பணியாளர் #சவுத்இந்தியன்வாய்ஸ் #SOUTHINDIANVOICE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here