ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக, சமூக நீதித்துறையின் சார்பில் இலாப நோக்கற்ற பொது அறக்கட்டளையாக ‘சமூக நீதி அறக்கட்டளை’ (Social Justice Foundation) தொடங்கப்படும் என்று சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த அறக்கட்டளை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அமைச்சர் வன்னி அரசு அவர்கள் ‘சமூக நீதி அறக்கட்டளை’யைத் தொடங்கி வைத்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலன், கல்வி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

அறக்கட்டளையின் தொடக்க முயற்சியாக, மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி டெவலப்பர்ஸ் லிமிடெட் (Mahindra World City Developers Limited) நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டம் குமிழி பகுதியில் அமைந்துள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில் (EMRS) நான்கு புதிய வகுப்பறைகளைக் கட்டுவதற்கு நிதியுதவி வழங்கியுள்ளது. பழங்குடியின மாணவர்களின் கல்விக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் இந்த முயற்சி, அறக்கட்டளையின் தொடக்ககாலப் பணிகளில் முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும், ‘கற்றவை பற்றவை’ என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கிய 10 மிதிவண்டிகளை அமைச்சர் வன்னி அரசு மாணவர்களுக்கு வழங்கினார். மாணவர்கள் கல்வி கற்கச் செல்வதற்கான வசதிகளை மேம்படுத்துவதுடன், அவர்களின் கல்வித் தொடர்ச்சிக்கும் இத்தகைய உதவிகள் துணையாக அமையும்.

இந்நிகழ்வில் சமூக நீதித்துறை செயலாளர் டாக்டர் என். சுப்பையன், ஆதிதிராவிடர் நல இயக்குநர் (மு.கூ.பொ.) மற்றும் தாட்கோ மேலாண்மை இயக்குநர் டாக்டர் கி. செந்தில் ராஜ், பழங்குடியினர் நல இயக்குநர் திரு. எஸ். அண்ணாதுரை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி, நலன் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவை ஒருங்கிணைக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள ‘சமூக நீதி அறக்கட்டளை’, கல்வி உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மாணவர்களுக்கான உதவிகள் உள்ளிட்ட பணிகளை முன்னெடுக்க உள்ளது. சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு, விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதில் இந்த அறக்கட்டளை முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here