மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் SOUTH INDIAN VOICE இணையதளம் மற்றும் வார இதழ் சார்பில் சுமார் 500 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களின் அடிப்படை வாக்கு வங்கி பெருமளவில் தக்கவைத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தசர்வேயில் குறிப்பிடத்தக்க அம்சமாக, நடிகர் விஜய் சுமார் 6 சதவீதம் மட்டுமே தனிப்பட்ட செல்வாக்கைப் பெற்றிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.இது மதுராந்தகம் தொகுதியின் தற்போதைய அரசியல் நிலவரத்தைப் புரிந்துகொள்ள முக்கியமான அம்சமாக எடுத்துக்கொள்ளலாம்.
ஒட்டுமொத்த சதவீத அடிப்படையில் மு.க. ஸ்டாலின் 39.3 சதவீத ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளார். அதேவேளை, கட்சி எதிர்கொண்ட பல்வேறு சவால்களையும் மீறி எடப்பாடி பழனிசாமி 30.7 சதவீத ஆதரவைப் பெற்று இரண்டாவது இடத்தில் வலுவாக உள்ளார். பல்வேறு சர்ச்சைகள் மற்றும் எதிர்க்கருத்துகள் இருந்தபோதிலும், தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் திருமாவளவன் தனது ஆதரவைத் தொடர்ந்து தக்கவைத்திருப்பது சர்வே முடிவுகளில் தெளிவாகத் தெரிகிறது. ஒட்டுமொத்தமாக 10.67 சதவீத ஆதரவைப் பெற்றுள்ள திருமாவளவன், தலித் பகுதியில் முதன்மையான தலைவராகவே பார்க்கப்படுகின்றார். தலித் பகுதியில் விசிக, திமுக, அதிமுகவைவிட நடிகர் விஜய் பின்தங்கியுள்ளதையே நமது சர்வே பிரதிபலிக்கின்றது.நடிகர் விஜய்யைவிட சுமார் 4 சதவீதம் அதிக ஆதரவைப் பெற்று திருமாவளவன் மூன்றாவது இடத்தில் இருப்பதாக இந்தச் சர்வே காட்டுகிறது.

இந்தக் கருத்துக்கணிப்பில், தேர்தலில் போட்டியிடாத அன்புமணியை கேள்விகளிலும் சேர்க்கவில்லை; போட்டியிலும் அவரை ஒரு தனிப்பட்ட காரணியாக எடுத்துக்கொள்ளவில்லை. இருப்பினும், வன்னியர் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அன்புமணி ஆதரவாளர்கள் மத்தியில் திருமாவளவனுக்கு எதிரான மனநிலை ஆழமாக வேரூன்றியிருப்பது தெரிகிறது. அதேநேரத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி த வெ க கூட்டணியில் இருப்பதால், அந்தப் பகுதிகளில் திருமாவளவனையும் தாண்டி ஒருசில பகுதி வாக்காளர்களிடம் திமுகவுக்கு ஆதரவான மனநிலையும் காணப்படுகிறது. இதற்கிடையில், மதிமுகவில் இரண்டாம் கட்டத் தலைவராக இருந்த மல்லை சத்யா திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதும், இளைஞர்கள் மத்தியில் திமுகவுக்கு கூடுதல் ஆதரவை ஏற்படுத்தக்கூடிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.

தலித் மற்றும் வன்னியர் வாக்குகளைத் தவிர்த்து, பிற சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்களில் கணிசமான பகுதியினர் திமுகவுக்கு ஆதரவான மனநிலையில் இருப்பதாக இந்தச் சர்வே உறுதியாகதெரிவிக்கின்றது. கருங்குழி மற்றும் மதுராந்தகம் பகுதிகளில் திமுகவுக்கும், அச்சிறுப்பாக்கம் பகுதியில் அதிமுகவுக்கும் வலுவான ஆதரவு இருப்பது போன்ற நிலை காணப்படுகிறது. ஆனால், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துக்கு (த.வெ.க.) தொகுதியில் எந்தப் பகுதியிலும் குறிப்பிடத்தக்க வலுவான அடிப்படை ஆதரவு தென்படவில்லை என்பது முக்கியமான அம்சமாக உள்ளது. கட்சியின் அடிப்படை கட்டமைப்பு இன்னும் முழுமையாக வலுப்பெறாத நிலையில், த.வெ.க. தற்போது ‘லெட்டர் பேட் கட்சி’ என்ற விமர்சனத்தை எதிர்கொள்ளும் அளவிலேயே இருப்பதாக இந்த சர்வேயின் களநிலை மதிப்பீடு காட்டுகிறது.

தற்போதைய நிலவரப்படி, மு.க. ஸ்டாலினுக்கு 39.3 சதவீதமும், எடப்பாடி பழனிசாமிக்கு 30.7 சதவீதமும், திருமாவளவனுக்கு 10.67 சதவீதமும், நடிகர் விஜய்க்கு 6.01 சதவீதமும் தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதாக இந்த சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. த வெ க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருப்பதால், அக்கட்சிக்கு ஓரளவு கூடுதல் வாக்குகள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் களநிலை தெரிவிக்கிறது. அதேபோல், கடைசி நேரப் பிரச்சாரம், பணப் பட்டுவாடா மற்றும் ஆளுங்கட்சி அதிகாரத்தைப் பயன்படுத்துதல் போன்ற காரணிகளால் த.வெ.க.வின் வாக்கு சதவீதத்தில் 3 முதல் 5 சதவீதம் வரை கூடினாலும் தற்போதைய களநிலவரத்தின் அடிப்படையில் இரண்டாவது இடத்தைப் பெறும் அளவுக்குகூட அந்தக் கட்சியின் ஆதரவு இருப்பதாக இந்த சர்வே காட்டவில்லை. தேர்தல் நடைபெறும் வரையிலான அரசியல் மாற்றங்கள், கூட்டணி மாற்றங்கள் மற்றும் களப்பணிகள் வாக்கு நிலவரத்தை மாற்றக்கூடிய காரணிகளாக இருக்கலாம் ஆனாலும் த வெ க இரண்டாம் இடத்துக்கு வருவதற்கே பகிரதபிரயத்னப்பட வேண்டியிருக்கும் அதற்கான சாத்தியமும் இல்லை என்பதே உண்மையான களநிலவரம்.விஜய் என்கிட்ட போலி பிம்பம் உடைபடாமலிருக்க ஒரே வழி கொள்கை எதிரியின் தேர்தல் நிறுத்த டெக்னிக்தான் கை கொடுக்கும் என்ன நடக்கிறது பார்ப்போம்… திராவிட ஜீவா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here