பிப்ரவரி 19 முதல் புனித ரமலான் தொடக்கம் ஓமான் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புதன்கிழமை மாலை பிறை (ஹிலால்) காணப்படும் சாத்தியம் இல்லையென மதிப்பீடு செய்யப்பட்டதால், வியாழக்கிழமை (19/02/2026) முதல் புனித ரமலான் மாதம் தொடங்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஓமான் முழுவதும் வசிக்கும் முஸ்லிம்கள் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நோன்பு நோற்கத் தொடங்குவார்கள். இஸ்லாமிய நாட்காட்டியின் படி, ஒவ்வொரு மாதமும் பிறை காண்பதன் அடிப்படையில் துவங்குவது வழக்கம். அதன்படி, ஷஃபான் மாதத்தின் 29ஆம் நாளான புதன்கிழமை மாலை, நாட்டின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பிறை பார்வைக் குழுக்கள் வானிலை மற்றும் விண்வெளி கணிப்புகளின் அடிப்படையில் கண்காணிப்பு மேற்கொண்டன. ஆனால் பிறை தென்படாததால், ஷஃபான் மாதம் 30 நாட்கள் பூர்த்தியாகி, அதன் மறுநாளான வியாழக்கிழமை ரமலானின் முதல் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்குப் பெரும் ஆன்மிக, ஒழுக்க மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்தது. அதிகாலை முதல் சூரிய அஸ்தமனம் வரை உணவு, தண்ணீர் மற்றும் பிற தேவைகளில் இருந்து விலகி நோன்பு நோற்பது இந்த மாதத்தின் முக்கிய அம்சமாகும். மேலும், ஐந்து வேளை தொழுகைகள், தராவீஹ் சிறப்பு தொழுகைகள், குர்ஆன் பாராயணம், ஜகாத் மற்றும் தர்ம செயல்கள் போன்றவை அதிக அளவில் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த மாதம் தன்னடக்கம், பொறுமை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்தும் காலமாகக் கருதப்படுகிறது.
ரமலான் மாதத்தை முன்னிட்டு, ஓமன் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் சிறப்பு தொழுகைகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. சமூக அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களும் ஏழை, எளிய மக்களுக்கு நோன்பு திறப்பு உணவு (இப்தார்) வழங்கும் திட்டங்களை அறிவித்துள்ளன. அரசாங்கம் பொதுமக்கள் ஆன்மிக சூழலில் இந்த மாதத்தை கடைப்பிடிக்க தேவையான வசதிகளை உறுதி செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
தகவல்: சவூதிவாழ் தமிழ் மன்றம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here