இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களுக்காக நடிகர் விஜய், பொதுத் தேர்தலைவிட அதிக கவனம் செலுத்தி தொடர்ந்து பரப்புரையிலும் ரோட் ஷோவிலும் ஈடுபட்டு வருகிறார். பல இடங்களில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லாத நிலையிலும் மதுராந்தகம் தொகுதியைச் சுற்றி தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருவது சமூக வலைதளங்களில் கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது. அதே நேரத்தில், சில பகுதிகளில் பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவித்து விஜய்யிடம் மனுக்களையும் வழங்கியுள்ளனர்.

மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அரசியல் தலைவர்களிடம் மனுக்களை வழங்குகின்றனர். குறிப்பாக, எதிர்காலத்தில் முதலமைச்சராக வருவேன் என்று கூறி அரசியலில் ஈடுபடும் ஒருவர் மக்களின் குறைகளையும் மனுக்களையும் பொறுப்புடன் அணுக வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், விஜய் இன்னும் நடிகர் என்ற மனநிலையிலிருந்து முழுமையாக அரசியல் தலைவராக மாறவில்லை என்ற விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், மதுராந்தகத்தில் பொதுமக்கள் வழங்கிய மனுவை விஜய் வயல்வெளியில் தூக்கி வீசிவிட்டுச் சென்றதாக சமூக வலைதளங்களில் தகவல்களும் குற்றச்சாட்டுகளும் பரவி வருகின்றன. இந்தச் சம்பவம் உண்மையா என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டிய நிலையில், அது தொடர்பான காட்சிகள் மற்றும் பதிவுகள் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மக்கள் கொடுத்த மனுவை அலட்சியப்படுத்தியதாகத் தெரியும் எந்தவொரு செயலும், அரசியலில் மாற்றத்தை எதிர்பார்த்து வரும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

இதனால் மதுராந்தகம் தொகுதி மக்கள் விஜய் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும், தேர்தலில் தங்களது வாக்கின் மூலம் பதில் அளிப்போம் என்றும் சிலர் கூறுவதாக சமூக வலைதளப் பதிவுகள் தெரிவிக்கின்றன. “மக்கள் கொடுத்த மனுவுக்கே மதிப்பளிக்கவில்லை என்றால், மக்களின் வாக்குக்கு எப்படி மதிப்பளிப்பார்?” என்ற கேள்வியும் தற்போது விவாதமாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here