இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் முக்கிய முன்னேற்றமாக, Larsen & Toubro நிறுவனத்தின் துணை நிறுவனமான L&T Semiconductor Technologies (LTSCT), SEMICON India 2026 நிகழ்வில் ஒரே நேரத்தில் 40 புதிய செமிகண்டக்டர் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 18 அன்று வெளியிடப்பட்ட இந்தத் தயாரிப்புகள் “Silicon to Systems: Building the Ecosystem” என்ற கருப்பொருளின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டன.
L&T Corporate
இந்த 40 தயாரிப்புகளின் தொகுப்பில் L&T Semiconductor Technologies நிறுவனத்தின் முதல் Silicon Carbide (SiC) தயாரிப்பு தளம் முக்கிய கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக 1200V SiC MOSFET தொழில்நுட்பம், மின்சார வாகனங்களுக்கான வேகமான சார்ஜர்கள், microgrids, solid-state transformers மற்றும் traction inverters போன்ற உயர் திறன் தேவைப்படும் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இதனுடன், இந்தியாவிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்ட BLDC motor controller chip ஒன்றையும் LTSCT அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு மாடல்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த chip, ஆற்றல் திறன் அதிகமான BLDC மின்விசிறிகள் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் USB-C GaN charger, Vision Camera SoC மற்றும் Secure Identity Platform போன்ற தொழில்நுட்பங்களும் இந்தப் புதிய தயாரிப்புத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.



