தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கை, மாநில அரசின் மொழி மற்றும் கல்வி தொடர்பான உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, பேரறிஞர் அண்ணா உருவாக்கிய “இரு மொழிக்கொள்கை” என்ற அடிப்படைச் சிந்தனையை உறுதியாக பின்பற்றி, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான தங்களது கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைந்த நாள்முதல், மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களின் அத்யாவசிய தேவைகள்கூட புறக்கணிக்கப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்களிலும் பொது மக்களிடமும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் இது வெளிப்படையாக தெரியவில்லை. ஆனால், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததும், மத்திய அரசு மாநில அரசிடம் குறுகிய மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாக மக்கள் மத்தியிலேயே கருத்துருவாக்கம் நிலை கொண்டுவிட்டது.கல்வித்துறையில் மத்திய அரசின் அணுகுமுறைகல்வி தொடர்பான விஷயங்களில் மத்திய அரசு தொடர்ந்து சர்ச்சையை எழுப்பியதுடன் மறைமுக ஹிந்தி திணிப்பு, மூன்றாம், ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் போன்ற அம்சங்கள் மாநில கல்விக் கொள்கையின் அமைப்பை சிதைக்கக் கூடும் என்ற விமர்சனங்கள் கல்வியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடமிருந்து எழுந்தன.தமிழ்நாட்டின் கல்வித்தரம் இந்திய ஒன்றியத்தில் சிறந்ததாக பார்க்கப்படுகிறது. தேசிய புள்ளிவிபரங்கள் கூட, உயர்கல்வி பெறும் மாணவர்களின் விகிதம் அமெரிக்காவிற்கு இணையாக இருப்பதாக பதிவு செய்திருந்தன. 50% இலக்கை எட்டும் விகிதத்தில், இந்தியா முழுவதும் நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தை தமிழகம் ஏற்கனவே அடைந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் புதியகல்விக் கொள்கையை ஏற்க இயலாது என்கிற வாதம் அரசு மற்றும் கல்வியாளர்களிடம் வலுப்பெற்றது.புதிய கல்விக் கொள்கையை எந்தக் காலத்திலும் ஆதரிக்கமாட்டோம் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் பலமுறை அறிவித்தார். அதேசமயம், மாநிலத்தின் தேவைகள் மற்றும் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு தன்னுடைய சொந்த கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் இறங்கியது.இந்நிலையில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட மாநில கல்விக் கொள்கை, பேரறிஞர் அண்ணாவின் இரு மொழிக் கொள்கையை அடிப்படையாக கொண்டு வெளியானது. அதன் முக்கிய அம்சங்கள்:1. இரு மொழிக் கொள்கை தொடர்ச்சி – தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் கல்வி அமைப்பின் அடிப்படை.2. பொதுத் தேர்வு ரத்து – மூன்றாம், ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கிடையாது.3. பதினொன்றாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வும் நீக்கம் – மாணவர்களின் உளவியல் அழுத்தத்தை குறைத்து, கல்வி ஆர்வத்தை மேம்படுத்தும் நடவடிக்கை.50 ஆண்டுகளின் தொடர்ச்சிகடந்த 50 ஆண்டுகளாக திமுக, பேரறிஞர் அண்ணாவின் இரு மொழிக் கொள்கையின் முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசிவந்தது அதனை நடைமுறையிலும் பின்பற்றியும் வந்தது. தற்போதைய கல்விக் கொள்கை அந்த வரலாற்றுப் பாதையைத் தொடர்ந்து, “திராவிட மாடல் அரசு” என்பது வெறும் அரசியல் வாசகம் அல்ல, செயல்பாட்டில் உறுதியானது என்று நிரூபிக்கிறது.தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை, மத்திய அரசின் ஒரே மாதிரியான கல்வி முறைப்படுத்தலுக்கு எதிராக, மாநிலத்தின் கல்வி சுயாட்சியை வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய இரு மொழிக் கொள்கைக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் தனித்துவமான கல்வி அடையாளத்துக்கும் நீதி செய்கிறது… திராவிட ஜீவா